கடற்கரையில் மீட்கப்பட்ட சிலைகள் அடையாளம் தெரிந்தது
சென்னை, : பட்டினப்பாக்கம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஆஞ்சநேயர், வாதிராஜர் சிலைகள், தி.நகர் வாதிராஜ மடத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில், இரண்டு சுவாமி சிலைகள் கிடந்தன.கருங்கல்லாலான இந்த சிலைகளை, பட்டினப்பாக்கம் போலீசார் மீட்டனர். அதில், ஒன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை; மற்றொன்று வாதிராஜர் சிலை.இரண்டையும் மீட்ட போலீசார், காவல்நிலையம் எடுத்து சென்று விசாரிக்கின்றனர். இந்நிலையில், அந்த சிலைகள் உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளைக்கு சொந்தமானது என தெரியவந்துஉள்ளது.இது குறித்து அம்மடத்தினர் தரப்பில் கூறியதாவது:
28 ஆண்டுகளுக்கு முன் : கடந்த 1994ல் நிறுவப்பட்ட இந்த மடம், மூல மடத்தின் பீடாதிபதியால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு பரம்பரை அறங்காவலர் இல்லை. அம்மடத்தில் கோவில் ஒன்றும் உள்ளது.அதில், 28 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநயேர் சிலை, வாதிராஜர் பழைய கற்சிலைகள் இருந்தன. இந்நிலையில், அக்கோவில் கும்பாபிஷேம், 9ம் தேதி நடந்தது.இதில், உடுப்பி சோடே ஸ்ரீ வாதிராஜ மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஸ்வவல்லப தீர்த்த சுவாமிகள் பங்கேற்று நடத்தி வைத்தார்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மடத்தின் கோவிலில் ஹயக்ரீவர், பஞ்சமுகி ஆஞ்சநேயர், வாதிராஜர் மற்றும் பூதராஜரின் புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பழைய கற்சிலைகள் மென்மையான கற்கள் மற்றும் அரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. புதிய சிலைகளை பிரதிஷ்டை செய்ததால், பழைய சிலைகளை நமது பாரம்பரியத்தின்படி, இயற்கையான வகையில் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும்.எனவே, 12ம் தேதி பட்டினபாக்கம் கடற்கரையில் பழைய கற்சிலைகளை விஜர்சனம் செய்தோம். பட்டினப்பாக்கம் கடற்கரையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயர், வாதிராஜர் கற்சிலைகள் எங்கள் மடத்தைச் சேர்ந்தவை.அதில், திருட்டுச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அந்த சிலைகளை மீண்டும் மரபுப்படி விசர்ஜனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க காவல் துறையை கோர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.