குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், விடையாற்றி உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், வைகாசி விசாகப்பெருவிழா, 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும். நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ல் கேடயம் மங்களகிரி உற்சவத்துடன் வைகாசி விசாகப்பெருவிழா நிறைவு பெற்றது. இதைதொடர்ந்து விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் மாலை 6:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் உற்சவமான நேற்று இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. இதில், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், இரவு 7:30 மணிக்கு வள்ளி, தெய்வனையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் முருகப்பெருமானை பக்திபரவசத்துடன் வழிபட்டனர்.