திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
ADDED :4847 days ago
திருவள்ளூர் : பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. திருவள்ளூர் நேதாஜி சாலையில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா கடந்த, 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் தினசரி பகல் 2 மணிக்கு செய்யாறு கோவிந்த ராஜன் குழுவினரின் மகாபாராத சொற்பொழிவும், மாலையில் அம்மன் கரகம் வீதியுலாவும் நடந்தன.
நிறைவு நாளான நேற்று முன்தினம், மாலை தீ மிதி திருவிழா நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு உற்சவர் திரவுபதியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.