உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு

வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு

சென்னை : கும்பகோணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற லட்சுமி மற்றும் சரஸ்வதி பஞ்சலோக சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர்; இருவரை கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மர்ம நபர்கள் இருவர், பழமையான பஞ்சலோக சுவாமி சிலைகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு கடத்தவும் முயற்சி செய்து வருகின்றனர் என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு, இரு தினங்களுக்கு முன் தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித், 22; கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார், 40, ஆகியோர் வெளிநாடுகளுக்கு சிலை கடத்த முயற்சி செய்து வருவதை கண்டுபிடித்தனர். பின், சிலை வியாபாரிகள் போல போலீசார் நடித்து, இருவரையும் சந்தித்தனர். ரஞ்சித் மற்றும் உதயகுமார் ஆகியோர், இரண்டு சிலைகளையும் 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்க முடிவு செய்துள்ளோம். நீங்கள் வேண்டுமானால், சிலையை பார்த்துவிட்டு, விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனக்கூறியுள்ளனர்.இதற்கு போலீசாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, ரஞ்சித் மற்றும் உதயகுமார் ஆகியோர் சிலைகளுடன், நேற்று முன்தினம் இரவு, கும்பகோணம் அருகே சுவாமிமலை என்ற இடத்திற்கு எடுத்து வந்தனர். அப்போது, இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்; சிலைகளையும் மீட்டனர். ஆய்வு செய்ததில், பழமையான பஞ்சலோக சிலைகள் என்பது உறுதியாகி உள்ளது.ரஞ்சித் மற்றும் உதயகுமார் ஆகியோரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டன என, எங்களுக்கு தெரியும். ஆனால், நாங்கள் சிலைகளை திருடவில்லை. இதன் பின்னணியில் வேறு சிலர் உள்ளனர். சிலைகளை உள்ளூரிலோ அல்லது வெளிநாடுகளிலோ விற்று பணம் கொடுத்தால், கமிஷன் தொகை தருவதாக கூறினர். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தோம் என, கடத்தல் பேர்வழிகள் வாக்குமூலம் அளித்து உள்ளனர். இதையடுத்து, சிலைகள் திருடப்பட்டதன் பின்னணியில் உள்ள மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !