உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ஆனி உத்திர பிரம்மோற்சவம் துவக்கம்

காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ஆனி உத்திர பிரம்மோற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்- காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவிலில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில், மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும்பராசரேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 16 திங்கட்கிழமை, 16 விளக்கேற்றி, சுவாமியை வலம் வந்து வழிபட்டால், தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் உற்சவம் நடைபெறவில்லை. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் நேற்று காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து 13 நாட்களுக்கு நடைபெறும் பிரம்மோற்வசத்தில் காலை, இரவு என தினமும் சுவாமி, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா செல்வார்.அதன்படி, நேற்று காலையில், சுவாமி பல்லக்கில் எழுந்தருளிவீதியுலா சென்றார்.இரவு, சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் வீதியுலா சென்றனர்.வரும் 5ம் தேதி இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 7ம் தேதி காலை 8:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன.உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில்அர்ச்சகர்கள், பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !