உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காத்திருக்கு எண்ணெய்க் கொப்பறை

காத்திருக்கு எண்ணெய்க் கொப்பறை


எச்சரிக்கிறது கருட புராணம்

பதினெட்டு புராணங்களில் பதினேழாவதாக இருப்பது கருட புராணம். மகாவிஷ்ணுவும், கருடனும் உரையாடும் விதத்தில் இது அமைந்துள்ளது. ‘இறப்புக்குப் பின் ஆன்மாவின் நிலை என்ன’ என கருடன் கேட்க, மகாவிஷ்ணு அளித்த விளக்கமே இந்நுால். இதை இயற்றியவர் வியாசர். பாவம் செய்தவர்கள் செல்லும் நரகங்களும் அங்கு தரப்படும் தண்டனைகளும் பற்றி இதில் கூறப்பட்டுள்ளது.

நரகத்தின் பெயர்        பாவச் செயல்கள்        தண்டனை

தாமிஸிரம்     பிறர் மனைவி, குழந்தை, பொருளை அபகரித்தல் நரகத்தில் எம கிங்கரர்கள் முள்ளாலான கட்டை, கதாயுதத்தால் பாவிகளை அடிப்பர்.

அநித்தாமிஸ்ரம்    கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் அல்லது வஞ்சித்தல்         கண்களை இழந்து இருளில் தவித்தல்

ரௌரவ நரகம்    பிறர் குடும்பத்தைக் கெடுத்தல், தம்பதியைப் பிரித்தல், அழித்தல்,     பாவிகளை எம கிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவர்.

மகா ரௌரவ நரகம்    கொடூரமாக பிறரை வதைத்தல், பணம், பொருளுக்காக நாசம் செய்தல்.    குரு என்ற கோரமான மிருகம் பாவிகளைச் சூழ்ந்து ரணகளப்படுத்தும்.

கும்பிபாகம்     வாயில்லா ஜீவன்களை வதைத்தல், கொல்லுதல், மாமிசம் புசித்தல்     எரியும் அடுப்பில் வேகும் எண்ணெய் கொப்பறையில் இட்டு எமதுாதர்கள் துன்புறுத்துவர்.

காலகுத்திரம்    பெரியோர், பெற்றோரை அடித்தல், அவமதித்தல், பட்டினி போடுதல்.    பாவிகளின் பாவத்திற்கு ஏற்ப அடி, உதை, பட்டினி என வதைக்கபடுவர்.

அசிபத்திரம்    தெய்வத்தை நிந்தித்தல், அதர்மத்தை பின்பற்றுதல் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு இனம் புரியாத பயத்துடன் அவதிப்படுவர்.

பன்றி முகம்    குற்றமற்றவரைத் தண்டித்தல்,  அநீதிக்குத் துணைபோதல்    பன்றியின் கூரிய பற்களில் அகப்பட்டு கடிபடுவர்.

அந்தகூபம்    சித்திரவதை செய்தல், கொலை செய்தல்.    கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும். காட்டு மாடுகளால் மிதிபடுவர்.

அக்னிகுண்டம்    பிறரது உரிமையை செல்வாக்கால் அபகரித்தல், பலாத்காரமாக தனது எண்ணத்தை நிறைவேற்றுதல்    கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னி குண்டத்தில் வதைக்கப்படுவர்.

வஜ்ர கண்டகம்    சேரக்கூடாத ஆண், பெண்ணைக் கூடும் காமவெறியர்கள்     நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித் தழுவ நிர்ப்பந்திக்கப்படுவர்.


கிருமி போஜனம்    சுயநலத்துடன் வாழ்தல், பிறரது உழைப்பைச் சுரண்டுதல்     துளைத்துச் செல்லும் உயிர்களால் பாவிகளின் உடம்பு எங்கும் துளையிட்டு துன்புறுத்தப்படுவர்.

சான்மலி        தீமை, பாவம் பாராமல் இஷ்டம் போல செயல்படுபவர், நெஞ்சில் ஈரமில்லாதவர்     முள்ளாலான தடிகள், முட்செடிகளால் எமகிங்கரர்களால் துன்பத்திற்கு ஆளாவர்.

வைதரணி    நல்வழிகளை விரும்பாதிருத்தல், தர்மத்துக்குப் புறம்பாக நடத்தல்     வைதரணி என்ற ரத்தம், சீழ், சிறுநீர், மலம், கொடிய பிராணிகள் நிறைந்த  வைதரணி நதியில் அழுந்தி துன்பத்திற்கு ஆளாவர்.

பூபோதம்     வெட்கமின்றி நடத்தல், இழிந்த பெண்களுடன் உறவாடுதல், ஒழுக்கக்குறைவு, எந்த லட்சியத்தை தவறான வழியில் அடைதல்    பாவிகளை விடமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்    பிராணிகளைக் கொடுமைப்படுத்தல்    கூர்மையான அம்பு, பாணங்களை பாவிகளின் மீது எய்து துன்புறுத்துவர்.

விசஸனம்    பசுக்களுக்கு தீங்கு செய்தல்.    பாவிகளுக்கு கிங்கரர்கள் சவுக்கடி கொடுப்பர்.

லாலா பக்ஷம்    மனைவியைக் கொடுமைப்படுத்துதல், முறையற்ற காம இச்சை கொள்ளுதல்    பாவிகளும் அதே முறையில் வதைக்கப்படுவர்.

சாரமேயாதனம்    வீடுகளுக்கு தீவைத்தல், சூறையாடுதல், மக்களைக் கொன்று குவித்தல்     விசித்திரமான கொடிய மிருகங்களால் வதைபடுவர்.

அவீசி    பொய்சாட்சி சொல்லுதல்    நீர்நிலைகளில் மூழ்கி மூச்சு விட முடியாமல் சிரமப்படுவர்.

ஒழுக்கத்தை பின்பற்றி மனிதன் நல்லவனாக வாழ வேண்டும் என்பது தான் கருட புராணத்தின் அடிப்படை நோக்கம். நமது எண்ணம், சொல், செயலுக்கு ஏற்ப பாவம், புண்ணியங்கள் ஏற்படுகின்றன. தீய செயல்களைச் செய்து நரகத்தில் அழுந்தாமல் தர்மத்தை வாழ்வில் கடைபிடித்து நற்கதியடைவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !