உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் சன்னதி படிக்கட்டு பழமை மாறாமல் புதுபிக்கப்பட்டது

ராமேஸ்வரம் கோயில் சன்னதி படிக்கட்டு பழமை மாறாமல் புதுபிக்கப்பட்டது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 40 ஆண்டுக்கு முன் சுவாமி சன்னதி முன்பு அமைத்த கருங்கல் படிக்கட்டு பழமை மாறாமல் மீண்டும் சரிசெய்ததை பக்தர்கள் வரவேற்றனர்.

ராமாயணம் வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் கோயில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலில் தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் புனித நீராடி தரிசிக்கின்றனர். 1975ல் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த போது, கோயில் சுவாமி சன்னதி முன் கருங்கல்லில் படிக்கட்டு அமைத்தனர். இதனால் பக்தர்கள் படிக்கு கீழே நின்று தரிசனம் செய்துள்ளனர். காலப்போக்கில் வி.ஐ.பி.,கள், மடாதிபதிகளுக்காக, படிக்கட்டுகளை மறைக்கும் விதமாக சிமெண்ட் தளத்துடன் கிரானைட் கல் ஒட்டினர். இதனால் சுவாமி சன்னதி முன் பல தரப்பினரும் அமர்ந்து தரிசித்தால், பொது தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் முகம் சுளித்தனர். இந்நிலையில் தற்போதைய கோயில் துணை ஆணையர் மாரியப்பன் முயற்சியில், பழமை மாறாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் விதமாக நேற்று சிமெண்ட் தளத்தை அகற்றி, 1975ல் அமைத்த கருங்கல் படிக்கட்டு தெரியும் வகையில் ஊழியர்கள் சரி செய்தனர். இதன்மூலம் சுவாமி சன்னதி முன் அமர்ந்து தரிசிக்காதபடி சிறப்பு, பொது வரிசையில் சென்று பக்தர்கள் எளிதில் தரிசிக்கலாம். கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !