உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: பசி எடுக்கிறது என்பதற்காக யாரிடமும் கைநீட்டாதீர்கள்!

ரமலான் சிந்தனைகள்: பசி எடுக்கிறது என்பதற்காக யாரிடமும் கைநீட்டாதீர்கள்!

பசியை யாரொருவன் பொறுத்துக் கொள்கிறானோ அவனுக்கு இறையருள் உண்டு. ஒருவனுக்கு பசி ஏற்பட்டாலோ, தேவை ஏற்பட்டாலோ அதைப் பகிரங்கப்படுத்தாமல் மக்களிடம் மறைத்து விடுவானாகில் ஒரு வருடம் ஹலாலான உணவை அவனுக்கு கொடுப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான், என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். ""பசித்தவர்களுக்கு இறைவன் நிச்சயம் உணவளிப்பான். பசிக்கிறதே என அடுத்தவர்களிடம் உணவு கேட்காதீர்கள் என்றும்,""ஒருவன் யாசகத்தின் ஒரு கதவைத் திறந்தால், அல்லாஹ் அவன் மீது ஏழ்மையின் எழுபது கதவுகளைத் திறந்து விடுகிறான், என்றும் அவர்கள் சொல்கிறார்கள். கை நீட்ட நீட்ட வறுமை தான் பெருகும். நல்லது எது, கெட்டது எது என்பது பற்றியும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

ஒருமுறை நாயகம்(ஸல்) அவர்களின் நண்பர் ஒருவர், திடகாத்திரமான உடலுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மற்ற நண்பர்கள் நபிகளாரிடம், ""அண்ணலாரே! இவர் இவ்வளவு உடல்பலம் மிக்கவராக இருக்கிறார்.இந்த பலத்தை மட்டும் இவர் நல்ல வழியில் பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும், என்றனர். அதற்கு அண்ணலார், ""தோழர்களே! அவர் தம் பச்சிளங்குழந்தையின் தேவைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது நல்லவழி. பெற்றோர்களின் பணிவிடைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது நல்லவழி.

வயது முதிர்ந்த பெற்றோர்களின் பணிவிடைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது சீரியவழி. நெறி கெட்ட வழியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சென்று கொண்டிருக்கிறார் என்றால் அதுவும் நல்லவழி. ஆனால், பெருமைக்காகவும், புகழுக்காகவும் சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது ஷைத்தானின் வழியாகும், என்றார்கள்.இந்த நல்வழிகள் குறித்து இந்த நோன்புகாலத்தில் சிந்திப்போம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !