உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்திரவள்ளி சமேத சோமேஸ்வரர் கோவிலில் மகா நவசண்டி ஹோமம்

சவுந்திரவள்ளி சமேத சோமேஸ்வரர் கோவிலில் மகா நவசண்டி ஹோமம்

சேந்தமங்கலம்: சவுந்திரவள்ளி சமேத சோமேஸ்வரர் கோவிலில், மகா நவசண்டி ஹோம விழா கோலாகலமாக நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற சவுந்திரவள்ளி சமேத சோமேஸ்வரர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடிக் கிருத்திகை மற்றும் மகா நவசண்டி ஹோம விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 55ம் ஆண்டு ஆடி கிருத்திகை மற்றும், 14ம் ஆண்டு மகா நவசண்டி ஹோமம் கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை 7 மணிக்கு பால் குடம் அழைத்து வரப்பட்டது. காலை 7.30 மணிக்கு, துர்க்கை, சரஸ்வதி தேவியின் கலச பூஜை ஜபம், பாராயணம், மகா நவசண்டி ஹோமம், கஜ, கோமாதா, கன்னிகா பூஜையும், சண்டிஹோமம், மகா தீபாராதனையும் நடந்தது.மாலை 4 மணிக்கு, 108 சங்கு பூஜை, 108 சங்காபிஷேக ஹோமம், சவுந்தரவள்ளி சோமேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். இன்று (ஆக.,11) காலை 7 மணிக்கு, மகா கணபதி பூஜை, நவக்கிரஹ மற்றும் தன்வந்திரி ஹோமம், சவுந்தரவள்ளி அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது.மாலை 5 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவப்பிரகாசம், தக்கார் வரதராஜன், கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !