சங்கரநாராயண சுவாமி கோயிலில் 31ல் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா வரும் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னொரு காலத்தில் பக்தர்களிடையே ‘ சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் ‘ என்ற சர்ச்சை ஏற்பட்டது. அப்போது ‘ சிவன், விஷ்ணு இருவரும் ஒருவரே ‘ என்று பக்தர்களுக்கு விளக்கும் வகையில் காட்சி தரக் கோரி கோமதி அம்பாள் சங்கரலிங்க சுவாமியை வேண்டி ஒற்றை காலில் தபசு இருந்தார். அம்பாளின் வேண்டுகோளை ஏற்று சங்கரலிங்க சுவாமி தனது உடலின் ஒரு பகுதியை சிவனாகவும், மற்றொரு பகுதியை விஷ்ணுவாகவும் மாற்றி ‘சங்கரநாராயண சுவாமியாக’ காட்சி கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சியே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் வரை நடக்கும். இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா வரும் 31ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோமதி அம்பாள் சன்னதி முன் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 9ம் திருநாளான ஆகஸ்ட் 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 10ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சங்கரலிங்க சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கிறார். விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.