ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் பாசிகள், கழிவு துணிகள் : பக்தர்கள் அருவெருப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் கடல் பாசிகள், கழிவு துணிகள் ஒதுங்கி கிடப்பதால் பக்தர்கள் அருவெறுப்பாக நீராடி செல்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயிலில் நீராடுவார்கள். ஆனால் அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள் கழிவு துணிகளை கடலோரத்தில் வீசுகின்றனர். இதனை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் சேகரித்து தீர்த்த கடற்கரையை சுகாதாரமாக பராமரித்து வந்தனர். ஆனால் நேற்று அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான கடல் பாசிகள் கழிவு துணிகள் ஒதுங்கி கிடந்து, துர்நாற்றம் வீசியது. இக்கழிவுகளை அகற்றாததால் அதிகாலை 5:30 மணி முதல் நீராட வரும் பக்தர்கள் அருவருப்புடன் நீராடி சென்றனர். காலை 8 மணிக்கு பின் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் 4 பேர் பாசிகள், கழிவு துணிகளை சேகரித்தனர். தினமும் அதிகாலை 5:30 மணி முதல் பக்தர்கள் நீராடுவது வழக்கமாக இருந்தும், நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் புனித தீர்த்தம் அசுத்தமாகி கழிவுகள் தேங்கி கிடக்கும் குளம் போல் காட்சியளித்தது என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.