உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ஆற்றில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் தவிப்பு

ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ஆற்றில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் தவிப்பு

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி , தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் குடிநீர், கழிப்பிட வசதியின்றி பெரும் தவிப்பிற்குள்ளாகினர்.

காசியை விட புண்ணியம் தரும் ஸ்தலமான திருப்புவனம் வைகை ஆற்றில் அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி புஷ்பவனேஸ்வரரை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு எந்த வித வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. பெண்கள் குளிக்க, உடை மாற்ற தனி இடம் இல்லை. கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட எதுவுமே இல்லை. பக்தர்கள் வீசி எறிந்த துணிகள், பொருட்கள், கழிவுகள் துர்நாற்றத்துடன் குவிந்து கிடந்தன.

பக்தர்கள் கூறுகையில்: தேவஸ்தானம் திதி, தர்ப்பணம் கொடுக்கவும், வாகனம் நிறுத்தவும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. மழை காலங்களில் மேற்கூரை இன்றி நனைந்து கொண்டே பக்தர்கள் திதி கொடுக்க வேண்டியுள்ளது. புண்ணிய ஸ்தலம் முழுவதும் குப்பைகள், கழிவுகள் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த இடத்தை பேரூராட்சியிடம் ஒப்படைத்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தி கட்டணம் வசூலிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !