மயிலாடுதுறை கோவில்களில் அமைச்சர் தரிசனம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் உள்ள கோவில்களில் அமைச்சர் சேகர் பாபு சுவாமி தரிசனம் செய்ததுடன், ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறைக்கு நேற்று அதிகாலை வந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரங்கம்பாடி தாலுகா கருவாழைக்கரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் நடத்தினார். பின்னர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், சொத்துக்கள் உள்ளிட்ட விபரங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்து, கோவில் திருப்பணிகளை பார்வையிட்டார். பின்னர் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன், கோவில் அருகே உள்ள ஹிந்து சமய அறநிலை துறைக்கு கீழ் செயல்படும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அமைச்சருடன் ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.