ஆண்டாள் கோயிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை (ஆகஸ்ட் 1) காலை 9:05 மணிக்கு துவங்குகிறது.
கடந்த ஜூலை 24 அன்று கொடியேற்றத்துடன் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான பெரியாழ்வார் மங்களாசாசனம், ஐந்து வருட சேவை, சயன சேவை போன்ற நிகழ்வுகள் சிறப்புடன் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் நாளை (ஆகஸ்ட் 1) காலை 9:05 மணிக்கு துவங்குகிறது. இதையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு சரியாக காலை 9:05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோயில் பட்டார்கள் செய்துள்ளனர்.