நகரி தேசம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பட்டு வஸ்திரம்
நகரி:நகரி தேசம்மன் கோவிலுக்கு முதல் முறையாக, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அமைச்சரும், நடிகையுமான ரோஜா, அவரது கணவர் செல்வமணி, பட்டு வஸ்திரம் வழங்கி தரிசனம் செய்தனர்.
சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி உற்சவ விழா நடந்து வருகிறது.இந்நிலையில், விளையாட்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, திரைப்பட இயக்குனரும், ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர், முதன் முதலாக திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தேசம்மன் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் வழங்கி தரிசனம் செய்தனர். அப்போது, தேசம்மன் கோவில் சேர்மன் அனந்தபாபு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நகரி நகராட்சி தலைவர் நீலமேகம் ஆகியோர் அமைச்சரை வரவேற்றனர். அதை தொடர்ந்து அமைச்சர் ரோஜா, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். மேலும், பட்டு வஸ்திரம் மூலவர் அம்மனுக்கு சாத்தி வழிபட்டார்.