உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

பேரூர்: பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்குயொட்டி, ஏராளமான பொதுமக்கள் குவிந்து வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நேற்று அதிகாலை முதலே, ஆற்றங்கரைகளில், பொதுமக்கள் குவிந்து வந்தனர். பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், நேற்று அதிகாலை, 5:00 மணி  முதல் பொதுமக்கள் வரத்துவங்கினர். படித்துறை படிக்கட்டில், வாழை இலை விரித்து, மிட்டாய், முறுக்கு போன்ற பலகாரங்களும், பழங்களும், தேங்காய், பூ படைத்து, ஏழு கூலாங்கற்களை சப்த  கன்னிகளாக பாவித்து, கற்பூரம் ஏற்றி பித்ருக்களையும், தெய்வங்களையும் வழிபட்டனர். அதன்பின், படைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். திருமணமாகாதவர்கள் திருமணம் நடக்க வேண்டியும்,  திருமணமானவர்கள் குழந்தை வேண்டியும் சப்த கன்னிகளை வழிபட்டானர். திருமணமான சுமங்கலி பெண்கள், புதிய தாலி சரடு மாற்றி கொண்டனர். சமீபத்தில் திருமணமான புதிய தம்பதிகள், தங்களின்  திருமண மாலைகளில் ஆற்றில் விட்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். தெய்வங்களையும், பித்ருகளையும் வழிபட்ட பொதுமக்கள், அன்னதானம் செய்து, பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கினர்.  ஆடிப்பெருக்கையொட்டி, பேரூர் படித்துறையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, வழிபட்டு சென்றனர். அதேபோல, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள நீர் நிலைகளிலும்,  பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !