திருத்தணி முருகன் கோவிலில் ஆடி ஞாயிறில் குவிந்த பக்தர்கள்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில் இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடி மாதம் மற்றும் வார விடுமுறையான ஞாயிறு என்பதால் வழக்கத்திற்கு மாறாக மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.சில பக்தர்கள் காவடிகளுடன் வந்தும், மொட்டை அடித்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்றினர். பொதுவழியில், மூலவரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் இரண்டரை மணி நேரம் காத்திருந்தனர். அதே போல், 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். முன்னதாக மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.