உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.

சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டிற்கான ஆடி பிரம்மோற்ஸவ திருவிழா கடந்த ஆக.3 ந் தேதி காலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது சுவாமிகள் தினந்தோறும் இரவு பறங்கி நாற்காலி,சிம்மம், பல்லக்கு ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 8ந் தேதி நடைபெற்றது. நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக வீர அழகர் காலை 10 மணிக்கு கோவிலிருந்து வெள்ளை குதிரை வாகனத்தில் வான வேடிக்கைகள், மேள, தாளங்கள் முழங்க பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு எழுந்தருளி அங்கிருந்து அலங்கார குளத்திற்கு சென்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து சுவாமி வீதிவுலா நடைபெற்றது.தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு பட்டத்தரசி கிராமத்தில் அன்னதானம் நடைபெற்றது.இதில் பட்டத்தரசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டத்தரசி கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !