பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா நேற்று கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.
இக்கோயில் பிரம்மோற்ஸவ விழா ஆக. 3 ல் துவங்கி தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வந்தார். முக்கிய நிகழ்வாக பெருமாள், ஆண்டாள் மாலை மாற்ற நிகழ்ச்சி ஆக. 8 ல் நடந்தது. ஆக. 10 அன்று முத்து பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும் அருள் பாலித்தார். நேற்று முன்தினம் காலை ஆடி தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் மேள, தாளம் முழங்க யாக மூர்த்தி மற்றும் பெருமாள் சடாரி புறப்பாடாகி வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அப்போது வேத மந்திரம் முழங்க சுவாமி ரத மற்றும் ஆடி வீதிகளில் வலம் வந்தார். இரவு சன்னதி கருடனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, கொடி இறக்கத்துடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.