உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா : ஆக. 22ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா : ஆக. 22ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஆக. 22 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குடவரை கோயிலில் பிரசித்தி பெற்றது பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில். இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா ஆக. 22 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று இரவு 8:30 மணிக்கு மூஷிக வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருவார். ஆக. 23 முதல் 29 வரை தினமும் காலை வெள்ளி கேடகத்தில் சுவாமி உற்ஸவம் நடக்கும். ஆக. 23 முதல் இரவு நேரத்தில் விநாயகர் சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை, யானை வாகனத்தில் வீதி உலா வருவார். ஆறாம் நாளான ஆக. 27 அன்று மாலை 4:30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். ஒன்பதாம் நாளான ஆக.30 அன்று காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருள்வதை தொடர்ந்து தேரோட்டம் நடக்கும். மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். ஆக. 31 அன்று காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், மெகா கொழுக்கட்டை படையல், அதனை தொடர்ந்து தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாட்களும் இன்னிசை நிகழ்ச்சி, கச்சேரி, பட்டிமன்றம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கண்டனுார் கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டணம் சுப்பிரமணியன் செட்டியார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !