உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா துவங்கியது

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா துவங்கியது

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சதுர்த்திப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக.30 ல் தேரோட்டம், ஆக.31 ல் தீர்த்தவாரி நடைபெறும்.

இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இன்று காலை 9:30 மணிக்கு கொடிப்படத்துடன் சண்டிகேஸ்வரர் கோயில் வலம் வந்து கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து உற்ஸவ விநாயகர், அங்குசத்தேவரும் எழுந்தருளி பூஜைகள் நடந்தன. கோயில் தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தரம் குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவச்சார்யர்கள் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அறங்காவலர்கள் நா.கருப்பஞ்செட்டியார், சித. சுப்பிரமணியன் செட்டியார் முன்னிலையில் காலை 10:13 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்து, அலங்காரத் தீபாராதனை நடந்தது. மாலையில் மூர்த்தி, உற்ஸவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு காப்புக்கட்டி விழா துவங்கியது.  நாளை முதல் தினசரி காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் 8:30 மணிக்கு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். ஆக.27 ல் கஜமுக சூரசம்ஹாரம், ஆக.30 ல் தேரோட்டம், ஆக.31 ல் தீர்த்தவாரியும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !