ஆண்டாள் கோயிலில் நாலாயிர திவ்ய பிரபந்த பாடசாலை துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாலாயிர திவ்ய பிரபந்த பாடசாலையை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.
வடபத்ர சயனர் சன்னதி பகல்பத்து மண்டபத்தில் துவங்கவுள்ள இந்த பாடசாலை திறப்பு விழாவிற்கு தக்கார் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் முத்துராஜா வரவேற்றார். நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், கோயில் பட்டர்கள், அலுவலர்கள், பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்றனர். தினமும் காலை, மாலை 06:00 மணி முதல் 08:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஒரு வருட காலம் பகுதி நேரமாக பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இதில் 5 பெண்கள் உட்பட 22 பேர் பங்கேற்கின்றனர்.