அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் குருக்கள் மாற்றம்
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்யநாதஸ்வரர் கோவில் குருக்கள் பிரச்சனையில் திடீர் திருப்பமாக புதிய குருக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரகண்டநல்லூர் அதுல்யநாதீஸ்வரர் கோவில் ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். ரமணர் உள்ளிட்ட மகான்கள் வருகை புரிந்த பழமையான இத்தலம் சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை ரமணாஸ்ரம நிர்வாகத்தால் புதுப்பிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக காசிவிஸ்வநாத குருக்கள் பூஜை செய்து வருகிறார்.
அரகண்டநல்லூர் நகர் பகுதியை சேர்ந்த பலரும் இக்குருக்களின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்து மாற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தனர். இதற்கு காசிவிஸ்வநாதர் குருக்கள் பதில் விளக்கம் அளித்து இருந்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்தனர். இதில் குருக்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இன்று கோவிலைத் திறந்து வேறு குருக்களிடம் பூஜை பணிகளை ஒப்படைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசாரின் பாதுகாப்புடன் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜய ராணி தலைமையில், ஆய்வாளர் பாலமுருகன், செயல்அலுவலர் அருள், தனி வட்டாட்சியர் ஆலய நிர்வாகம் ஞானம் உள்ளிட்டோர் கோவிலை திறக்க நடவடிக்கை மேற்கொண்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காசிவிஸ்வநாதன் கோவில் சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் குருக்கள் பரணி (எ) நடராஜன் கூடுதல் பொறுப்பு அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் பூஜைகள் செய்தார். குருக்கள் மாற்றப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்த அதே நிலையில் அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் கோவில் வளாகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.