கணபதி பப்பா மோரியா
ADDED :1133 days ago
இந்தியாவில் விநாயகர் வழிபாடு சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். இங்கு ‘கணேஷ் சதுர்த்தி’ என பிரம்மாண்டமாக கொண்டாடுவர். பத்து நாட்களுக்கு பக்திப் பரவசத்தில் இம்மாநிலமே மிதக்கும். விநாயகரை இங்கு குலதெய்வமாகவும், வெற்றி தரும் கடவுளாகவும் போற்றுகின்றனர்.
இங்கு திரும்பிய இடமெல்லாம் வழிபாடு நிகழ்வதைக் காணலாம். பேண்ட், சூட், கோட், டை என மார்டன் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு விதவிதமாக காட்சியளிப்பார். கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய உணவோடு, பர்பி, லட்டு, பால் பேடாவையும் நைவேத்யமாகப் படைப்பர். வழிபாட்டின் நிறைவாக, ‘கணபதி பப்பா மோரியா’ என்னும் பாடலைப் பாடி விநாயகரை வழியனுப்புவர். “மங்களம் தரும் விநாயகனே! இன்று சென்று வரும் ஆண்டில் திரும்பி வருக” என்பதே இதன் பொருளாகும்.