மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1356 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆயுதபூஜையையொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 26ம் தேதி நவராத்திரி விழாவையொட்டி, விநாயகர், முருகர், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய் அடங்கிய கொலு வைக்கப்பட்டது. நாள்தோறும் மாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆயுதபூஜையையொட்டி, நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, 16 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர் விடுமுறை என்பதால், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.