மருதமலையில் நவராத்திரி விழா நிறைவு
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விஜயதசமியையொட்டி, அம்பு சேவை நடந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த, செப்., 26ம் தேதி, நவராத்திரி விழாவையொட்டி, விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கொலு வைக்கப்பட்டது. நாள்தோறும், மாலையில் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இந்நிலையில், நவராத்திரி கொலு நிறைவு நாளான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 1:00 மணிக்கு, அம்பு சேவை உற்சவம் நடந்தது. இதில், முருகப்பெருமான், வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வன்னி மரத்தில் ஐந்து முறை, அம்பு செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.