கேதாரநாதர் கோயிலில் மகா ருத்ர யாகம் நடப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது
உலகத்தில் அமைதி நிலவவும், அனைத்து மக்களிடம் ஒற்றுமை தழைத்தோங்கவும், கேதார நாதர் கோவிலில் மகா ருத்ர யாகம் நடப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது என, வேதாகம பாடசாலை முதல்வர் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த ஸ்ரீதர்ம சாஸ்தா யாத்திரை குழுவினர், உத்தரகண்ட் மாநிலம், கேதாரகவுரி உடனுறை கேதாரநாதர் கோவிலில், மகா ருத்ர யாகப் பெருவிழாவை நேற்று முன்தினம் துவக்கினர்.
இரண்டாம் நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் மங்கள இசையுடன் துவங்கின. 60 பேர் கொண்ட சிவாச்சாரியார்கள் ருத்ர பாராயணம் செய்தனர்; பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.முன்னதாக, மதுரை, திருப்பரங்குன்றம், ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயம் வேதாகம பாடசாலை முதல்வர் ராஜா பட்டர் பேசியதாவது:பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், மகா ருத்ர யாகம் நடப்பது சாலப்பொருத்தம். உலக நன்மைக்காக நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.மிகுந்த சிரமத்துக்கு இடையில், அதுவும் பனி பொழியும் இமயமலை அடிவாரத்தில் நடத்துவது மிகச்சிறப்பு. இவ்வாறு அவர் பேசினார்.
பெங்களூரு, வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் பேசுகையில், எளிதில் மகா ருத்ர யாகத்தை நடத்திவிட முடியாது. அதற்கு இறையருள் வேண்டும்; உலகத்திலுள்ள அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழ்வதற்காக நடத்தப்படும் இந்த யாகத்தின் முக்கிய நோக்கம் நிறைவேற கடவுள் நிச்சயம் துணை நிற்பார், என்றார்.தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர்கள் சந்திரன், நந்தகோபால், ஆறுமுகம், பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.--நமது நிருபர்-