சிவபெருமான் சிலை வடிக்க மாமல்லபுரம் வந்தது பிரமாண்ட பாறை
மாமல்லபுரம்:பீஹார் மாநிலத்தில், 33 அடி உயரத்தில் பிரமாண்டமான சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த சிலையை, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் லோகநாதன் மற்றும் அவரது குழுவினர், மாமல்லபுரம் அடுத்த பட்டிக்காடு பகுதியில் வடிக்க உள்ளனர். சிலை வடிக்க தேவைப்படும் பிரமாண்ட பாறை, திருநெல்வேலி மாவட்டம், சீலாத்திகுளம் பகுதியிலிருந்து நேற்று எடுத்து வரப்பட்டது. இதன் எடை, 270 டன். என்.டி.சி., தனியார் நிறுவனத்தின், 154 டயர்கள் உடைய நீளமான டிரெய்லர் லாரி மூலம், இப்பாறை மாமல்லபுரத்திற்கு எடுத்து வரப்பட்டது. கடந்த 6ம் தேதி புறப்பட்ட லாரி, நேற்று மாலை, திருக்கழுக்குன்றம், கொத்திமங்கலம் பகுதியை கடந்தது. இதுகுறித்து, சிற்பி லோகநாதன் கூறியதாவது: பீஹாரில் அமைக்கப்படும் கோவிலுக்காக, பிரமாண்ட பாறையில் சிலை செய்கிறோம். இதற்காக வாங்கப்பட்ட பாறையின் மதிப்பு, 40 லட்சம் ரூபாய். அதை கொண்டு வரும் போக்குவரத்து செலவு, 45 லட்சம் ரூபாய். இச்சிலையை, 1,008 லிங்கங்கள், ஐந்து முகங்களுடன், 33 அடி உயரத்தில் வடிக்க உள்ளோம். ஓராண்டில் பணிகள் முடியும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.