உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறை தீர்த்த குருநாதர்

குறை தீர்த்த குருநாதர்


காஞ்சி மஹாபெரியவரின் பக்தரான பெங்களூரு நாகராஜனின் அனுபவம் ஆச்சரியமானது. ஒருநாள் வரலட்சுமி விரதத்தன்று இவரது தாயாருக்கு திடீரென கண் பார்வை மங்கியது. ‘நல்லநாள் அதுவுமா... இப்படியாகி விட்டதே’ என அழுது புலம்பினார். மருத்துவமனைக்குச் சென்ற போது, கண்புரைக்கு ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.  கண்மருத்துவர் ஒருவரை அணுக அவர் ஓரிருநாளில் வெளிநாடு செல்ல இருப்பதால் உடனடியாக கண்புரை ஆப்பரேஷன் செய்வதாக தெரிவித்தார். ஆப்பரேஷனும் நடந்தது. இந்நிலையில் நாகராஜனின் தாயார், ‘‘ ‘பயப்படாதே; நான் இருக்கிறேன்’ என காஞ்சி மஹாபெரியவர் என் மனதிற்குள் இருந்து தெரிவித்தார்’ என்று சொல்ல அனைவரும் நெகிழ்ந்தனர்.

கண் குணமானதும் மஹாபெரியவரை தரிசிக்க தேனம்பாக்கம் மடத்திற்கு தாயாருடன் சென்றார் நாகராஜன். அப்போது சுவாமிகள் தியானத்தில் இருந்ததால் காத்திருந்தனர். கண் விழித்ததும் எதிரில் நின்ற நாகராஜனின் தாயாரிடம், ‘‘பார்வை நன்றாக தெரிகிறதா’’ என விசாரித்தபடி ஆசி வழங்கினார். அத்துடன் உடனடியாக ஊருக்குப் புறப்படுமாறும் மஹாபெரியவர் தெரிவிக்க, அவர்களும் புறப்பட்டனர். வீட்டை வந்தடைந்ததும் தந்தி ஒன்று வந்தது. அவர்களுக்கு சொந்தமான பெங்களூரு வீட்டில் திருட்டு நடந்து விட்டது. உடனே வரும்படி தகவல் இருந்தது. ‘இதுவும் சோதனைதானா’ என வருந்தினார் நாகராஜன். ‘பயப்படாதே; மஹாபெரியவா நமக்கு துணையிருப்பா’’  என தைரியம் சொன்னார் அவரது தாயார்.


பெங்களூரு விரைவு ரயிலைப் பிடிக்கச் சென்ற போது நேரம் கடந்து விட்டது. வேறு வழியின்றி மற்றொரு ரயிலில் பயணித்தனர். வழியில் ஜோலார் பேட்டையில் நின்றிருந்த பெங்களூரு ரயிலைக் கண்டு கார்டிடம் தந்தியைக் காட்டி உதவுமாறு வேண்டினார் நாகராஜன். அவரும் சம்மதிக்க அதில் பயணித்தனர். வீட்டு வாசலில் நின்றிருந்த போலீஸ்காரர், ‘‘பூட்டை மட்டும்தான்  உடைத்திருக்கிறான். பொருள் ஏதும் திருடு போகவில்லை’’ என்றார். காஞ்சி மகானின் மகிமையால் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது போல உணர்ந்தார். தேனம்பாக்கம் மடத்தில் மீண்டும் சுவாமிகளைச் சந்தித்த போது முன்பு அவர் உடனடியாக ஊருக்கு புறப்படச் சொன்னதன் பொருள்  நாகராஜனுக்கு புரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !