உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா

குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா

காரமடை: காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்று வருகிறது. காரமடை அருகே, மருதூர் ஊராட்சி குருந்தமலையில், குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த, 25ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டு வருகிறது.நேற்று காலை, 11:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். அதன் பின் வள்ளி, தெய்வானை சமேதராக, கல்யாண சுப்பிரமணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். அதன் பின்பு விநாயகர், வீரபாகு, அஸ்திரதேவர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்தனர். வரும், 29ம் தேதி காலை சக்திவேல் வழங்கும் விழாவும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு கந்த சஷ்டி மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் மலையை சுற்றி நடைபெற உள்ளது. 31ம் தேதி காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை, 3:00 மணிக்கு திருவீதி உலாவும், 5:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !