மருதமலையில் 3 ஆண்டுகளாக நடந்து வரும் லிப்ட் பணி; புத்தாண்டில் பயன்பாட்டிற்கு வருமா?
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 3 ஆண்டுகளாக நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதால், புத்தாண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, நாள்தோறும் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அறநிலையத்துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவிலுக்கு வரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிமையாக மலைமேல் உள்ள கோவிலுக்கு செல்லும் வகையில், லிப்ட் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, 5.2 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ராஜ கோபுரத்தின் வலது பக்கத்தில் இரண்டு நிலைகளில் மேலே செல்வதற்கு இரண்டு லிப்ட், கீழே இறங்குவதற்கு இரண்டு லிப்ட் என, நான்கு லிப்ட்கள் அமைக்கும் பணியை, கடந்த, 2023ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனையடுத்து, பணிகள் துவங்கப்பட்டது. பாறைகள் அதிகம் உள்ளதால், ஆசிட் ஊற்றி பாறைகளை உடைக்கும் பணி காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து, பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில், லிப்டின் இரண்டாம் தளத்தில், உயரத்தில் சிறிய மாற்றம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இரண்டாவது தளத்திற்கு புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனாலும் காலதாமதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, முதல் தள லிப்ட் பணிகள் முடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இரண்டாம் தள லிப்ட் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மூன்று ஆண்டு காலமாக, இழுபறி ஏற்பட்டு வந்த லிப்ட் பணி, விரைந்து முடித்து, வரும் புத்தாண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது,"முதல் தள லிப்ட் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டது. ஒரு வாரத்திற்கு, முழு லிபட் பணிகளும் முடிக்கப்படும். வரும் ஜனவரி மாதத்தில், திறப்பு விழா நடத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,"என்றார்.