மண்ணுக்குள் புதைந்திருந்த கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏமப்பூர் கிராமத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த கொற்றவை சிற்பத்தை மக்கள் மீட்டெடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ஏமப்பூர் கிராமத்தில் சோழர் கால வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. 8 கரங்களுடன் ஆயுதங்களை ஏந்தி கம்பீரமாகவும் காணப்படும் இந்த சிற்பம், மிகப்பெரிய எருமைத் தலைமீது நின்றுள்ளது. இந்த சிற்பம் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கி.பி., 8–9ம் நுாற்றாண்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த கொற்றவை சிற்பம், பல ஆண்டுகளாக மண்ணில் புதைந்த நிலையில் இருந்துள்ளதை கிராம மக்களின் முயற்சியால், அண்மையில் மீட்கப்பட்டு, கான்கிரீட்டால் பெரிய மேடை அமைத்து, அதன் மீது சிற்பம் நிறுத்தப்பட்டுள்ளது.
கொற்றவை சிற்பத்திற்கு தற்போது பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், ‘ஏமப்பூர் கிராமத்தில் பல்லாண்டு காலம் மண்ணுக்குள் புதைந்திருந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வானுார் அருகே கரசானுார், விழுப்புரம் அடுத்த வெங்கந்துார், வேடம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொற்றவை சிற்பங்கள் ஏரி நீருக்குள் மூழ்கியும், மண்ணுக்குள் புதைந்தும் காணப்படுகின்றன. சுவாமி மேலே வந்தால், கெட்டது நடக்கும் எனும் தவறான அச்சம் அப்பகுதி மக்களிடம் நிலவுவதால் இந்த நிலை நீடிக்கிறது. சில இடங்களில், தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தால் சுவாமிக்க ஆகாது என்றும், சிற்பங்களை சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்திருக்கின்றனர். கொற்றவை சிற்பங்கள், தமிழர்களின் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த கலை, வழிபாட்டு சின்னங்களாகும். அழிவின் விளிம்பில் இருந்து இவை மீட்டெடுக்கப்பட்டு வழிபாட்டிற்குக் கொண்டு வந்து, பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றார்.