வைகையில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்ட பக்தர்கள் எதிர்ப்பு
சோழவந்தான்: சோழவந்தான் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் பாதையில் கழிப்பறை கட்ட பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள ஜெனக நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகராக ஆண்டுதோறும் வைகை ஆற்றில் இறங்குவார்.பல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் கூடி வழிபடுகின்றனர். ஜெனகை மாரியம்மன் உள்ளிட்ட கோயில் விழாக்களில் பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம், தீச்சட்டி இங்கிருந்துதான் எடுத்து செல்வார்கள். வட்ட பிள்ளையார் கோயில் வழியாக ஆற்றுக்கு செல்லும் பாதையில் ஏற்கனவே குளியல் தொட்டி உள்ளது. இதன் அருகே கழிப்பறை கட்ட எதிர்ப்பும், சோழவந்தானில் மட்டும் ரூ.பல லட்சம் மதிப்பில் கட்டிய 5க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் பயன்பாடின்றி பூட்டி கிடக்கும் நிலையில் புதிதாக தேவையா என கேள்வி எழுப்பி உள்ளனர். ஊத்துக்குழி பக்தர் அறிவுபுத்திரன் : விழாநாட்களில் ஒதுங்க இடமில்லாத நெருக்கடியான பகுதியில் கழிப்பறை தேவை இல்லாதது. வீடுதோறும் கழிப்பறை இருந்தும் ஆற்றுப்பகுதிக்கு வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர கழிப்பறை தேவையில்லாதது என்றார். பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் : குளியல் தொட்டி உள்ள அளவில் 100 சதவீதம் பக்தர்களுக்கு இடையூறு இன்றி, விழா நாட்கள் மற்றும் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் ஆண், பெண் பயன்பெறும் வகையில் கட்டப்படும் என்றார்.