தினமலர் செய்தி எதிரொலி, தவ்வை சிற்பத்தை வழிபட்ட கிராமமக்கள்
திருப்புவனம்: திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் கிராமத்தில் தினமலர் செய்தியை அடுத்து 7ம் நூற்றாண்டை சேர்ந்த தவ்வை சிற்பத்தை மீண்டும் பொதுமக்கள் வழிபட தொடங்கியுள்ளனர். 7முதல் 10ம் நூற்றாண்டு காலத்தில் தவ்வை எனப்படும் பெண் தெய்வத்தை வழிபட்டுள்ளனர். இதுகுறித்து மதுரை பாண்டியர்களை தேடி பயண குழுவின் தொல்லியல் ஆய்வாளர்கள் மதன், மணிகண்டன், அறிவுசெல்வம், தேவி ஆகியோர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செல்லப்பனேந்தல் விலக்கு என்ற இடத்தில் ஒரே கல்லில் ஆன தவ்வை சிலையை கண்டறிந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து அந்த சிலையை சுத்தம் செய்து மீண்டும் வழிபட தொடங்கினர்.
விக்னேஸ்வரன் கூறுகையில்: எங்கள் தாத்தா சேதுராமன் வகையறாவினர் இதனை வழிபட்டு வந்தனர். அரச மரத்தின் கீழே மூன்று பட்டிய கல்லுடன் இந்த பெண் தெய்வ சிலை இருந்தது. ஆய்வாளர்கள் வந்து இதனை கண்டறிந்து விபரங்களை எடுத்து கூறியதை அடுத்து நாங்கள் மீண்டும் இதனை விநாயகர் கோயிலில் வைத்து வழிபட தொடங்கியுள்ளோம், என்றார்.