உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கம் அருகே, 11ம் நுாற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

செங்கம் அருகே, 11ம் நுாற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

திருவண்ணாமலை: செங்கம் அருகே, 11ம் நுாற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறையில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த பாலருமுருகன் மற்றும் பழனிசாமி தலைமையிலான வரலாற்று ஆய்வாளர்கள்  குழுவினர் ஆய்வு செய்தனர்.


அப்போது, அங்குள்ள  காளியம்மன் கோவிலில் கல்வெட்டுடன் கூடிய கொற்றவை என்கிற பகவதி  சிற்பத்தை கண்டறிந்தனர். அக்குழுவினர் ஆய்வு செய்ததில், அவை,  11ம்  நுாற்றாண்டை சேர்ந்த முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிகாலத்தை சேர்ந்தது என்பது தெரியவந்தது. மேலும்,  ஐந்து அடி உயரம், மூன்று அடி அகலம் கொண்ட பலகை கல்லில், நான்கு கரங்களுடன், நேராக நின்ற நிலையில், தலையில் கண்ட மகுடம், கழுத்தில் சவடி, சரபளி அணிகலன்கள்,  இடது பின் கரத்தில் அணிச்சக்கரம், இடது முன்கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. வலது பின் கரத்தில் சங்கு, வலது முன் கரத்தில் வில், மற்றும்  கைகளில் வளையல், காலில் கழலும் உள்ளவாறு சிற்பம் உள்ளது.  இந்த சிற்பத்தின் முன்பக்கத்தில் ஒரு வரி, பின்புறம் எட்டு வரியிலும் எழுதப்பட்டுள்ளது. இவற்றை மாவட்ட நிர்வாகம் ஆவணப்படுத்தி பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !