உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று சத்ய சாய்பாபா பிறந்த நாள்: புட்டபர்த்தியில் குவிந்த பக்தர்கள்

இன்று சத்ய சாய்பாபா பிறந்த நாள்: புட்டபர்த்தியில் குவிந்த பக்தர்கள்

பிரசாந்தி நிலையத்தில், இன்று (நவ., 23) சத்ய சாய்பாபா பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியின் பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 41வது ஆண்டு பட்டமளிப்பு விழா, கவுரவ வேந்தர் சக்ர வர்த்தி முன்னிலையில் நேற்று நடந்தது. இதில், இஸ்ரோ தலைவர் சோமநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் சஞ்சீவி பேசியதாவது: பல்கலைக்கழகத்தில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கருவிகள் மற்றும் ஆய்வகம் ஆகியவற்றின் மூலம், சமூக நலனுக்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 6.9 கோடி ரூபாய் மதிப்பில் 19 ஆராய்ச்சி திட்டங்கள் நடந்து வருகின்றன. கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துகள். பல்கலைக்கழகம் நடத்தும், ஆக்சுவேரியல் சயின்ஸ் திட்டம், அமெரிக்காவில் உள்ள கேசுவாலிட்டி ஆக்சுவேரியல் சொசைட்டி வாயிலாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2022ம் ஆண்டிற்கான சி.ஏ.எஸ்., பல்கலைக்கழக விருதை, நமது கல்வி நிறுவனம் வென்றுள்ளது.இதுவரை இந்த அங்கீகாரத்தை வென்ற ஒரே இந்திய நிறுவனமும், நமது கல்வி நிறுவனம் தான். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்துடன் இணைந்து, பிரசாந்தி நிலையத்தில் சமீபத்தில் உலக விண்வெளி வார கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்தன.இவ்வாறு அவர் பேசினார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது: இந்த முக்கியமான நாளில், ஒரு மாணவராக உங்களின் முழு வளர்ச்சிக்கு பங்களித்ததற்காக, தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊக்கமளிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். ஒவ்வொரு மாணவரும் ஆர்வம், அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, கவனம், கற்றல் போன்ற முக்கிய பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் பெரிய உயரங்களை அடைய முடியும். ஒரு முற்போக்கான சமுதாயமாக நாம் செழிக்க தனி மனிதர்களிடம் உள்ள பச்சாதாபம், இரக்கம் இரண்டும் முக்கியமானவை. தொலைநோக்கு பார்வையுடைய பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா, கல்வித்துறையில் ஒரு புரட்சியை துாண்டி விட்டுள்ளதற்கு நன்றி. மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட அனைத்தையும் சிந்திக்கவும், மாற்றத்தை மதிப்பிடுவதற்கும் முயற்சி செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !