பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
பழநி : பழநி மலைக்கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி மலைக் கோயிலுக்கு நேற்று அண்டை மாநிலங்களில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வாகனங்களில் வந்தனர். விடுமுறை என்பதால் மற்ற பக்தர்கள் வருகையும் அதிக அளவில் இருந்தது. பழநி மலைக்கோயிலுக்கு வந்த வெளி மாநில வாகனங்கள் இலவச வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பியதால் அடிவாரம் சன்னதி வீதி கிரி வீதி அய்யம்புளி ரோடு அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி தேவஸ்தான விடுதிகள் நிரம்பின. மலைக்கோயிலில் காலை முதல் வின்ச் ரோப் கார் தரிசன வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சாமிர்த விற்பனை அதிகரித்தது. கிரி வீதி சன்னதி வீதிகளில் போலீசார் பற்றாக்குறையால் தனியார் செக்யூரிட்டிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த சிரமம் அடைந்தனர். பழநி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மலைக்கோயில் செல்லும் யானை பாதையில் பக்தர்களுக்கு காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சுக்கு காபி வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது.