உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலுக்கு வெளியே முதலுதவி மையம் இன்று திறப்பு

மதுரை மீனாட்சி கோயிலுக்கு வெளியே முதலுதவி மையம் இன்று திறப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆகமவிதியை மீறி அமைக்கப்பட்ட முதலுதவி சிகிச்சை மையம் தினமலர் செய்தி எதிரொலியாக மேலசித்திரை வீதியில் பிர்லா விடுதிக்கு மாற்றப்பட்டது. இன்று(டிச.,2) இம்மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறக்கிறார்.

தமிழகத்தில் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கான முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டார். மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மேற்கு ஆடி வீதியில் 3 படுக்கைகளுடன் மையம் அமைக்கும் பணி நடந்தது. மையத்தில் ரத்தப்பரிசோதனை, காய சிகிச்சை அளிக்கும்போது தரையில் ரத்தம் பட வாய்ப்புள்ளது. இது ஆகமவிதியை மீறுவதாகும் என தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. ஹிந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைதொடர்ந்து கோயிலுக்கு வெளியே மேலசித்திரை வீதியில் கோயிலின் பிர்லா தங்கும் விடுதியின் ஒரு பகுதியில் முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மட்டுமின்றி அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறுவர். இம்மையத்திற்கான டாக்டர், நர்ஸ், உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். அழகர் கோவிலிலும் கள்ளழகர் கோயிலுக்கு வெளியே 2 படுக்கைகளுடன் முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களை இன்று முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !