உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓணம் பண்டிகையை ஒட்டி குருவாயூரில் குவிந்தன வாழைக்குலைகள்!

ஓணம் பண்டிகையை ஒட்டி குருவாயூரில் குவிந்தன வாழைக்குலைகள்!

குருவாயூர்: ஓணம் பண்டிகையை ஒட்டி, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு, ஒரு மணி நேரத்தில், ஐநூறுக்கும் மேற்பட்ட நேந்திர வாழைக் குலைகளை சுவாமிக்கு பக்தர்கள் அர்ப்பணித்தனர். இதைக் கொண்டு, நேற்று பக்தர்களுக்குப் பழப்பிரதமன் பாயாசம் விருந்துடன் பரிமாறப்பட்டது. கேரளா, திருச்சூர் மாவட்டம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை ஒட்டி, பக்தர்கள் நேந்திர வாழைக் குலைகளை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு, இவ்வாண்டுக்கான பண்டிகையை ஒட்டி, நேற்று முன்தினம் காலை சீவேலி (யானையில் உற்சவ மூர்த்தி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி)க்குப் பின், பக்தர்களிடம் இருந்து வாழைக் குலைகள் பெறும் நிகழ்ச்சி துவங்கியது. காலையில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கொண்டு வந்த நேந்திர வாழைக் குலைகளை, கோவில் கொடிமரம் அருகே, காணிக்கையாக பெறப்பட்டது. நிகழ்ச்சியில், முதலில் பெறப்பட்ட வாழைக் குலை சுவாமிக்கு படைக்கப்பட்டது. இவ்வாறு, நிகழ்ச்சி துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே, ஐநூறுக்கும் மேற்பட்ட வாழைக் குலைகள் கோவிலில் குவிந்தன. தொடர்ந்து, இரவு நடை அடைக்கும் வரையிலும், வாழைக் குலைகளை பக்தர்கள் அர்ப்பணித்தவண்ணம் இருந்தனர். இவ்வாறு கிடைக்கப் பெற்ற வாழைக் குலைகளில் ஒரு பகுதி, நேற்று காலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட, 22 யானைகளுக்கும், ஒரு பகுதி புன்னத்தூர் கோட்டையில் பராமரிக்கப்படும் யானைகளுக்கும் வழங்கப்பட்டது. மேலும் ஒரு பகுதி வாழைப் பழங்கள், நேற்று பக்தர்களுக்கு குருவாயூர் தேவஸ்வம் போர்டு சார்பில் வழங்கப்பட்ட ஓண விருந்தின்போது, பரிமாறப்பட்ட பழப்பிரதமன் பாயாசத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள வாழைக் குலைகள் பொதுமக்களுக்கு ஏலம் விடப்பட்டன. இவ்வாறு ஏலம் விடப்பட்டதில், 1.50 லட்சம் ரூபாய் குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !