திருத்தணி முருகனை தரிசிக்க இரண்டரை மணி நேரம் காத்திருப்பு!
திருத்தணி: திருமண முகூர்த்த நாளான நேற்று, முருகன் மலைக் கோவிலில்,75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். மூலவரை தரிசிக்க இரண்டரை மணி நேரம் காத்திருந்தனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். வழக்கத்திற்கு மாறாக, நேற்று காலை 7 மணி முதலே மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று திருமண முகூர்த்த நாள் என்பதால், திருத்தணியில் உள்ள, 150க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் திருமணம் நடந்தது. இது தவிர மலைக்கோவில் வளாகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும், 20 ஜோடிகளுக்கு கோவில் நிர்வாகம் மூலம் திருமணம் செய்து வைக்கப் பட்டது.வழக்கமாக பக்தர்களுடன், திருமண நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களும் ஒரே நேரத்தில் மலைக் கோவிலுக்கு சென்றதால் பொது வழியில் மூலவரை தரிசிக்க, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.