வித்ய கணபதி கோவில் மகா கும்பாபிஷேக விழா
சேலம்: கருப்பூர் அருகே வித்ய கணபதி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது, விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.சேலம் அடுத்த கருப்பூர், கரும்பாலையில் எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளியில் எழுந்தருளிய வித்ய கணபதி கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. மகா ÷ஷாட கணபதி ஹோமம், கோபூஜையுடன் விழா துவங்கியது. மாலையில் முதற்கால யாக பூஜை, விநாயகர் வழிபாடு, புன்யாகம், பிரவேசபலி, வாஸ்து சாந்தி செய்து தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, 28ம் தேதி, இரண்டாம் காலயாக பூஜை, திருமுறைபாராயணம், விஷேச சந்தி, அபிஷேகத்தையடுத்து, கண்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மூன்றாம் காலயாக பூஜை துவங்கி, மூலிகை ஹோமம், திரவிய ஹோமம், மூலமந்திர, வேதமந்திர ஹோமம் யாக பூஜை செய்து வழிபாடு நடந்தது.நேற்று, விநாயகர் வழிபாட்டுடன் நான்காம் கால யாகவேள்வி, திருமுறைபாராயணம், மங்கள இசை வேதமந்திரங்கள் முழங்க வித்ய கணபதிக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை தரிசனம், கோபூஜை நடந்தது. விழாவில், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.