உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொட்டும் மழையில் வசந்தகால திருவோண பண்டிகை!

கொட்டும் மழையில் வசந்தகால திருவோண பண்டிகை!

மார்த்தாண்டம்:குமரி மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் திருவோண பண்டிகை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரளா, குமரி மாவட்டம் மட்டுமின்றி உலகெங்கும் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் ஜாதி, மத, இன வேறுபாடுகளை களைந்து ஒவ்வொரு வருடமும் திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் அத்தம் துவங்கும் நாளில் இருந்து கேரளா முழுவதும் மக்கள் ஓணப்பண்டிகையை கொண்டாட துவங்குகின்றனர். "அத்தம் பத்தினு பொன்னோணம் என்தற்கிணங்க அத்தம் துவங்கி 10 நாட்கள் ஓணப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.ஐதீகம்முன்காலத்தில் நம்நாட்டை ஆண்ட மகாபலி சக்ரவர்த்தி அளித்த வாக்குறுதிபடி மூன்றடி மண் கொடுக்க இயலாமல் போன போது வாமன வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கு மகாபலி சக்ரவர்த்தி தனது தலையை காண்பித்தார். அப்போது மகாவிஷ்ணு அவரை பாதாளத்துக்கு தள்ளினார்.

இதன் மூலம் மகாவிஷ்ணு தேவர்களின் துயர் துடைத்தார் என்பது ஐதீகம்.மகாபலி வருகைதனது பிரஜைகளின் மேல் கொண்ட பாசத்தால் அவர்களை தான் வருடத்திற்கு ஒருமுறை பார்க்க வேண்டுமென மகாவிஷ்ணுவிடம் மகாபலி சக்ரவர்த்தி கேட்டதற்கிணங்க ஒவ்வொரு வருடமும் திருவோண தினத்தன்று மகாபலி சக்ரவர்த்தி நாட்டு மக்களை காண வருவதாக வரலாறு. அவரை வரவேற்கும் விதமாக நாடெங்கிலும் ஓணப்பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது.அத்தப்பூதிருவோண கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பது அத்தப்பூ கோலம். பெண்கள் அதிகாலையில் எழும்பி நீராடி புத்தாடைகளை அணிந்து பலவண்ண பூக்களால் வீடுகளுக்கு முன் அத்தப்பூ கோலமிடுவர். பின்னர் குடும்பத்தினருடன் ஓண ஊஞ்சல், திருவாதிரை நடனம், புலிக்களி, படகு போட்டிகளை கண்டுகளிப்பர்.ஓணசத்யாஓணப்பண்டிகையின் மற்றுமொரு விசேஷம் ஓணசத்யா எனும் ஓணவிருந்து தயாரித்து பரிமாறுவதாகும். ஆச்சார அனுஷ்டானங்களுடன் ஓணப்பண்டிகை கொண்டாடுபவர்கள் அத்தம் துவங்கி 10 நாட்களும் சைவ உணவு வகைகளையே பயன்படுத்துவர். காய்கறி வகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பலவகை கூட்டுகள், சாம்பார், ரசம், பொரியல், அப்பளம் என ஓணவிருந்து பட்டியல் நீண்டு கொண்டே போகும்.ஏத்தன் பழம், பலாப்பழம், பால், அடை, பருப்பு, சேமியா பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாயசங்களும் ஓணவிருந்தை சுவைமிகுந்ததாக்குகிறது. இவற்றுடன் பழவகைகள், பலகாரங்கள் சேர்த்து மதியம் வாழை இலையில் ஓணவிருந்து பரிமாறி குடும்பத்துடன் அமர்ந்து உண்டு மகிழ்வது சிறப்பம்சமாகும். கேரளாவில் மாவட்டத்திற்கு மாவட்டம் உணவு வகைகள் தயாரிப்பில் வேறுபாடு உள்ளது.குமரியில் ஓணவிழாகன்னியாகுமரி மாவட்டம் முற்காலத்தில் கேரள மாநிலத்தோடு இணைந்திருந்தது. இதனால் கேரள பாரம்பரியத்தோடு ஒத்தஅளவில் தொன்றுதொட்டே குமரி மாவட்டத்திலும் ஓணப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம் போல இந்த ஆண்டும் ஓணப்பண்டிகை குமரி மாவட்டத்தில் களைகட்டியது. ஓணப்பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள், மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து குடும்பத்துடன் ஓணப்பண்டிகை கொண்டாடினர். குறிப்பாக விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஓணப்பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீடுகளுக்கு முன் பெண்கள் பூக்களால் அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் புத்தாடை அணிந்து கோயில்களுக்கு சென்று வழிபட்டனர்.

தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளை கண்டுகளிப்பதிலும், ஓணவிருந்து தயாரித்து உண்பதிலும், மாலை இன்ப சுற்றுலா செல்வதிலும் ஆர்வம் காட்டினர்.இளைஞர் மன்றங்கள்கிளப்புகள், இளைஞர் மன்றங்கள் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓணவிழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழித்துறை, மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், பொன்மனை, முன்சிறை, வைக்கல்லூர், கொல்லங்கோடு, களியக்காவிளை, தக்கலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலவண்ண பூக்கள், சமையல் உப்பு மற்றும் கலர் பொடிகள் பயன்படுத்தி பலவண்ணங்களில் விதவிதமான அத்தப்பூ கோலங்கள் இடப்பட்டிருந்தன.ஓண விளையாட்டுகள்கபடி, ஓணப்பந்து, வடம் இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், அத்தப்பூ கோலமிடுதல், வள்ளக்களி, புலிக்களி, கிரிக்கெட் போன்ற பலவிதமான போட்டிகள் இளைஞர் மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.ஓணமழை"ஓணமழை ஓடி ஓடி பெய்யும் என்ற பழமொழிக்கு மாறாக நேற்று காலை 10 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மார்த்தாண்டம், குழித்துறை, அருமனை, குலசேகரம், களியக்காவிளை, நித்திரவிளை, புதுக்கடை பகுதிகளில் மழை தொடர்ச்சியாக பெய்தது. மழை ஒருபுறம் ஆறுதலாக இருந்தாலும், சில பகுதிகளில் திருவோண கொண்டாட்டத்திற்கு இடையூறை ஏற்படுத்தியது. குறிப்பாக விளையாட்டு போட்டிகள், விழா நிகழ்ச்சிகள் திட்டமிட்ட படி நடத்த முடியவில்லை. இருப்பினும் சில பகுதிகளில் பெண்களும், ஆண்களும் மழையில் நனைந்தவாறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

அருகிவரும் ஓண நிகழ்ச்சிகள்: கேரளாவை போன்று குமரி மாவட்டத்திலும் அத்தம் துவங்கி திருவோண தினம் வரை 10 நாட்கள் பூக்களால் அத்தப்பூ கோலமிடும் வழக்கம். இதேப்போன்று கிராமபுறங்களில் அனைத்து வீடுகளிலும் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கும். சைவ உணவு வகைகள் பயன்படுத்தப்படும். ஓணவிளையாட்டுகள் குறிப்பாக ஓணப்பந்து, புலிக்களி, வள்ளக்களி ஆங்காங்கே நடத்தப்படும்.ஆனால் தற்போது மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் மிகுதியாக வாழும் இடங்களிலும், கேரள பாரம்பரியத்துடன் வாழும் பகுதிகளிலும் மட்டுமே ஆச்சார அனுஷ்டானங்கள் படி 10 நாட்களும் ஓணப்பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் ஓணவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடக்கிறது.பெரும்பாலான கல்லூரிகளில் அத்தப்பூ கோலமிட்டு, தும்பித்துள்ளல், திருவாதிரை நடனம், ஊஞ்சல் ஆட்டம் என ஓண கொண்டாட்டம் அமர்களப்படும். மேலும் சில இளைஞர் மன்றங்கள், கிளப்புகள் சார்பிலும் ஓணவிழா கொண்டாட்டம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடக்கிறது.குமரி மாவட்டத்தில் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் இன்றி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த ஓணப்பண்டிகை தற்போது பெரும்பாலான பகுதிகளில் சம்பிரதாயத்திற்காக மட்டுமே கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க ஓணவிழாவை அத்தப்பூ கோலம், ஓணஊஞ்சல், ஓணவிளையாட்டு, ஓணவிருந்து என்பனவற்றுடன் பாரம்பரிய முறைப்படி அனைவரும் கொண்டாட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !