சபரிமலையில் குறையாத கூட்டம்: பக்தர்கள் தொடர் அவதி
சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பனை தரிசிக்க, இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த சீசனில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அதிகளவில் வருகின்றனர். இந்தாண்டு வராவிட்டால் அடுத்து 50 வயதுக்கு பின் தான் சபரிமலையில் வரமுடியும் என்பதால், பத்து வயதை தொடும் நிலையில் உள்ள சிறுமியரும் அதிகம் வருகின்றனர். இந்நிலையில், தேவசம்போர்டு கணக்கு வழக்கில்லாமல் முன்பதிவை அனுமதிக்கிறது. ஸ்பாட் புக்கிங் என்ற பெயரிலும் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு முன்பதிவு வழங்குகிறது. இதனால் சபரிமலை சன்னிதானம் கடந்த ஐந்து நாட்களாக ஸ்தம்பித்துள்ளது. சன்னிதானத்தில் ஏற்படும் நெரிசலையும், காத்திருப்பையும் குறைக்க, நேற்று முன்தினம் இரவிலிருந்து, பக்தர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். எருமேலி பாதையிலும் இதே நிலை உள்ளது. இதனால், பக்தர்கள் ஐந்து மணி நேரம் வரை சாலையோரங்களில் காத்திருக்கின்றனர். கூட்டம் தொடர்ந்து நீடிப்பதால் தரிசனத்தை முடித்த பக்தர்கள், அபிஷேக நெய் மற்றும் பிரசாதம் வாங்கி விட்டு ஊர் திரும்பும் படி தொடர்ந்து ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படுகிறது.