பழனிக்கு பாதயாத்திரை துவக்கிய கடமலைக்குண்டு பக்தர்கள்
ADDED :1027 days ago
கடமலைக்குண்டு: பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட முருக பக்தர்கள் நேற்று கடமலைக்குண்டிலிருந்து பாதயாத்திரை தொடக்கினர். ஆன்மீக மாதங்களான கார்த்திகை, மார்கழியில் பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பன், முருகன் சுவாமிகளை நினைத்து விரதம் மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட நாட்கள் பய பக்தியுடன் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான நாளில் கோயிலுக்குச் சென்று விரதத்தை முடிக்கின்றனர். மலை கிராமமான கடமலைக்குண்டில் இருந்து நேற்று 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு தங்கள் பயணத்தை தொடங்கினர். கடமலைக்குண்டிலிருந்து கண்டமனூர், க.விலக்கு, வைகை அணை, தேவதானப்பட்டி, வத்தலகுண்டு, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் வழியாக 3 நாளில் பழனி கோயிலுக்கு சென்றடைய இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.