பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய விழாவில் பக்தர்கள் ரத்த தானம்
பெசன்ட் நகர் : அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவில், ஐந்தாம் நாளான நேற்று, நற்கருணை விழாவில், ஏராளமான பக்தர்கள் ரத்த தானம் செய்தனர். பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆண்டு விழா விமரிசையாக நடந்து வருகிறது. இதன், ஐந்தாம் நாள் நற்கருணை விழாவாக கொண்டாடப்பட்டது. வழக்கம் போல், காலை திருப்பலிகள் அரங்கேறின. பின், காலை 10 முதல் 2 மணி வரை ரத்த தான முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் ரத்த தானம் செய்தனர். குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிசோதனை நடந்தது. தொடர்ந்து, சென்னை, மயிலை மறை மாவட்டத்தில் உள்ள, 121 பங்குகளில் திருப்பலிக்கு உதவி செய்யும் பீட சிறார்களுக்கு வினாடிவினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை, எலியட்ஸ் கடற்கரையில் இருந்து ஆலயம் நோக்கி, திருஉடையுடன் சிறுவர்கள் சிறப்பு பேரணி நடத்தினர். அவர்களுக்கு சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. நற்கருணை விழா குறித்து, வேளாங்கண்ணி ஆலயத்தின் துணை பங்கு தந்தை வர்கீஸ்ரொசாரியா கூறியதாவது: நற்கருணை விழா விசுவாத்தின் ஊற்று என்ற தலைப்பில் நிகழ்த்தப்படுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ரத்தம் எந்த மக்களுக்கும், மதத்தினருக்கும், பிரிவினை சகோதர, சகோதரிகளுக்கும் கிடைக்காத மாபெரும் பொக்கிஷம். திவ்ய நற்கருணையில் உள்ள விசுவாசம். நற்கருணை என்பது கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கை மையம். நற்கருணை இல்லை என்றால் கிறிஸ்தவம் கிடையாது. செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் திருப்பலி வழிபாடு நடத்தினார். ஆடம்பர நற்கருணை தேர்பவனியும் நடந்தது. நற்கருணை என்பதே அருமருந்து தான். இவ்வாறு, வர்கீஸ்ரொசாரியா தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை வேளாங்கண்ணி ஆலய பங்கு தந்தை பிரான்சிஸ் மைக்கேல் செய்திருந்தார்.