பந்தாரப்பள்ளி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பந்தாரப்பள்ளி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி அடுத்த பந்தாரப்பள்ளியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த, 31ம் தேதி தொடங்கியது. அன்று காலை, 10 மணிக்கு அம்மனுக்கு, கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், மாலை 7 மணிக்கு கங்கா பூஜை, கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.செப்டம்பர் 1ம் தேதி, காலை சதுர்த்துவார பூஜை, யாகசாலை பிரவேசம், இரவு, 7 மணிக்கு சண்டி ஹோமம், துர்கா ஹோமமும், 8 மணிக்கு, பட்டிமன்றம் நடந்தது.நேற்று அதிகாலை யாகசாலை பூஜை, சாந்தி ஹோமமும், 8 மணிக்கு மஹாகும்பாபிஷேம் நடந்தது. நிகழ்ச்சியில் பந்தாரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், வாணவேடிக்கை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பந்தாரப்பள்ளி ஊர் பொதுமக்கள் செய்தனர்.