புவனகிரி வள்ளலார், ராகவேந்திரர் இல்லங்களில் பொங்கல் வழிபாடு
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் மற்றும் மருதுார் வள்ளலார் அவதார இல்லங்களில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார் மாவட்டம் புவனகிரி தாலுகா, வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வருந்திய மகான் வள்ளலார் பிறந்த மருதுாரில் பக்தர்கள் முக்கிய விழாக்களில் அவரது இல்லத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம். குறிப்பாக தமிழர் திருநாளான பொங்கல் அன்று அன்னதானம் வழங்கியும், அகவற்பா பாடியும் ஆண்டாண்டு காலமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். காலையில் வெளியூர் வள்ளலார் பக்தர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் என பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புத்தாடை அணிந்து மருதுாரில் வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் வென்னீர் வழங்கினர். புவனகிரியில் மகான் ராகவேந்திரர் பிறந்த இல்லம் கோவிலாக நிர்மானிக்கப்பட்டு சுவேத நதி தீர்த்தத்துடன், மந்தராலய மரபின் படி, பல்வேறு நறுமணப்பொருட்கள் மற்றும் திரவங்களை கொண்டு அபிேஷக ஆராதனை செய்து வருகின்றனர். நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு காலையில் இருந்த பக்தர்கள் அதிகளவில் வரத் துவங்கினர். ரகு மற்றும் ரமேஷ் ஆச்சாரியர்கள் சிறப்பு அபிேஷகம் நடத்தி அன்னதானம் வழங்கினர்.