திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தெப்போற்ஸவம் கோலாகலம்
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழாவில் நேற்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வெளித்தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
29ம் தேதி மதியம் நெல்லுக்கு வேலியிட்ட வைபவம், 4ம் தேதி நெல்லை கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது. நேற்று முன்தினம் கோயிலில் உள்ள சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கிரதமுனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தரசபா நடராஜர் திருநடனக்காட்சி நடந்தது. தெப்போற்ஸவத்தை முன்னிட்டு நேற்று மதியம் நெல்லை எஸ். என். ஹைரோட்டில் உள்ள வெளிதெப்பக்குள மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். அங்கு ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதனையடுத்து நேற்று இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க தெப்ப மண்டபத்தை 9முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தெப்போற்ஸவத்தில் கோயில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி, பேஸ்கர் முருகேசன் மற்றும் நெல்லை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.