தென் பெண்ணையாற்றில் சிவலிங்கம் கண்டெடுப்பு
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே தென்பெண்ணையாற்றில் இருந்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணையாறு உள்ளது. விவசாயிகள் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஆற்றில் பருவ மழையின் காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை ஆற்றில் வற்றாமல் தண்ணீர் செல்கிறது. நேற்று முன்தினம் மாலை வெள்ளத்தால் உடைந்து சேதமான ெஷட்டர் அருகே மணல் பாங்கான இடத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மணலில் புதைந்த நிலையில் பாறை இருப்பது தென்பட்டது. உடன் அங்கிருந்தவர்கள் சந்தேகமடைந்து மணலை முழுமையாக அப்புறப்படுத்தி பார்த்தபோது கருங்கற்களால் ஆன மேல் பகுதியில் லேசாக உடைந்த நிலையில், சிவலிங்கம் மற்றும் குழவி கல் இருப்பது தெரியவந்தது. கிராம முக்கியஸ்தர்கள் ஆற்றிலிருந்த சிவலிங்கம் மற்றும் குழுவி கல்லைக் கொண்டு சென்று மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் வி.ஏ.ஓ., பிரியா சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்த வேண்டும். சிவலிங்கத்தை கோவிலில் வைத்து பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.