உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலங்குடி திருவிழா : பக்தர்கள் கருப்பருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

வேலங்குடி திருவிழா : பக்தர்கள் கருப்பருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

கண்டவராயன்பட்டி: திருப்புத்தூர் அருகே வேலங்குடி சாம்பிராணி வாசகர் கருப்பர் கோயிலில் முதல்நாள் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்புத்தூர் அருகே வேலங்குடியில்  கருப்பர் கோயில் முதல்நாள் விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று நேர்த்திக்கடனாக அரிவாளை சார்த்தி வருகின்றனர். வேலங்குடியில் சாம்பிராணி வாசகர் உறங்காப்புளி கருப்பர் கோயிலில்  மகாசிவராத்திரியை முன்னிட்டு  திருவிழா  நடந்து வருகிறது. பிப்.15 ல் காப்புக்கட்டி விழா துவங்கியது.  தொடர்ந்து பக்தர்கள் கருப்பருக்கு விரதமிருந்து அர்ச்சனை செய்து வழிபட்டு வருகின்றனர். நேற்று பாரி வேட்டை முடிந்து இன்று காலை முதலாம் திருவிழா துவங்கியது.  கருப்பருக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அங்காள அம்மன் கோயிலிலிருந்து  உற்ஸவ அம்மன் புறப்பாடாகி கருப்பர்கோயில்  பச்சை வாழைக்குடிலில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் சுற்று வட்டாரக்கிராமத்தினர் நேர்த்திக்கடனாக அரிவாள், காவடி எடுத்து சார்த்தி வருகின்றனர். மாவிளக்கேற்றியும், தலை முடியும் இறக்கியும், கரும்பு தொட்டில் கட்டியும் நேர்ச்சை நிறைவேற்றுகின்றனர்.  பக்தர்கள் சாம்பிராணி அளித்து,   பச்சை வாழை படையலாக  கரும்பு, தேங்காய்,வாழைப்பழத்தை கருப்பருக்கு படைத்து அர்ச்சனை செய்கின்றனர். தொடர்ந்து மாலையில் சாமி அழைப்பு நடந்தது.  அங்காளம்மன் கோயில் வலம் வந்து கருப்பர் கோயில் வந்து சாமியாட்டம் நடந்தது. காலை முதல் பல இடங்களில் தொடர்ந்து அன்னதானம் நடந்து வருகிறது. நாளை இரண்டாம் நாள் திருவிழாவும், நாளை மஞ்சள் நீராடுதலுடனும் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !